12 September 2016

ஏகபோகத்தை எதிர்கொள்ள 

பிஎஸ்என்எல் தயாரா?

நாட்டின் முன்னணித் தொழில் குழுமமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்தின் மூலம் அதிரடியாக தொலைத் தொடர்புத் துறையில் காலடி எடுத்துவைத்திருக்கிறார். நான்காவது தலைமுறை (4ஜி) சேவைகளை ஒருங்கிணைத்து ‘ரிலையன்ஸ் ஜியோ’ அறிவித்திருக்கும் திட்டங்கள் ஏனைய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்தியில் கலக்கத்தையும் நுகர்வோர் மத்தியில் எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருக்கின்றன.


இனி குரல் அழைப்புகள் இலவசம், ரோமிங் கட்டணம் ரத்து, 1 ஜி.பி. பயன்பாட்டுக்கு ரூ.50 என்கிற அளவுக்கு இணையப் பயன் பாட்டுக்குக் குறைந்த கட்டணம், முதல் நான்கு மாதங்களுக்கு இலவசப் பயன்பாடு, எல்லாவற்றுக்கும் மேல் ரூ.2,999-க்குத் தொடங்கும் திறன் பேசிகளின் விலை ஆகியவை இந்த அறிவிப்பின் முக்கியமான அம்சங்கள். ‘‘இந்தியாவின் 18,000 நகரங்கள், 2 லட்சம் கிராமங்கள் எனப் பரந்து விரிந்திருக்கும் தன் புதிய நிறுவனத்தின் வலைப் பின்னல் மூலம் 125 கோடி மக்களை அதாவது, நாட்டின் ஆகப் பெரும்பான்மை மக்களை மார்ச் 2017-க்குள் சென்றடைவதே ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்தின் குறிக்கோள்’’ என்கிறார் முகேஷ் அம்பானி.
தொலைத்தகவல் தொடர்புத் துறையில் இந்தியா பெரிய சந்தை. இங்கு 100 கோடிக்கும் மேற்பட்ட செல்பேசி இணைப்புகள் இருக்கின்றன. இணையதள சேவை தரமானதாகவும் மலிவானதாகவும் இருந்தால், இவர்களில் பெரும்பாலானவர்கள் இணையதள சேவையையும் பயன்படுத்தப்போவது நிச்சயம். தற்போது 35 கோடிப் பேர் செல்பேசியில் இணையதளங்களைப் பயன்படுத்துவதாகத் தரவுகள் சொல்கின்றன. மத்திய அரசும் மாநில அரசுகளும் தங்களுடைய பல்வேறு சேவைகளை இப்போது இணையதள வாயிலாக அளிக்கத் தொடங்கிவிட்டதால், சாமானியர்களுக்கும்கூட திறன்பேசிகள் இன்றியமையாதவையாக மாறும் காலகட்டத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம். எனவே, இத்துறையில் உள்ள நிறுவனங்கள் மிகத் திறமையாகச் செயல்பட்டு, குறைந்த செலவில் நிறையப் பயன்களை அளித்தால் நிச்சயம் அது இந்தத் துறையை மேலும் பெரிய அளவில் வளர்த்தெடுக்கும் என்பதோடு, தேசத்தின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றும்.


ரிலையன்ஸின் அறிவிப்புகள் இத்துறையில் விலைப் போட்டியைத் தொடங்கியிருக்கிறது. இதுவரை 1 ஜி.பி.க்கான இணையப் பயன் பாட்டுக் கட்டணம் சுமார் ரூ.250 என்றிருக்கும் நிலையில், ரூ.50 எனும் அதன் அறிவிப்பு ஏனைய நிறுவனங்களை உடனடி மாற்றத்தை நோக்கித் தள்ளியிருக்கிறது. ஆனால், இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், தன்னுடைய வாடிக்கை யாளர் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ளும் அதே வேகத்தில், சேவைகளையும் நல்ல தரத்தில் அளிக்க வேண்டும். கட்டணங்களை நீண்ட காலத்துக்கு உயர்த்தாமல், இப்படியே பராமரிக்க வேண்டும்.


இந்தியச் சந்தை எப்போதுமே ஏகபோகத்துக்கு இடம் தராது. வணிக நிறுவனங்கள் இடையேயான போட்டி எப்போதும் ஆரோக்கியமானதாக அமைய வேண்டும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு களை எதிர்கொள்ளத்தக்க வகையிலேயே ஏனைய நிறுவனங்களும் இத்துறையில் இருக்கின்றன என்பதால், இப்போதைய போட்டி மக்களுக்கு ஆதாயம் என்றே சொல்ல வேண்டும். நம்முடைய கவலை யெல்லாம் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், இப்படியான போட்டிச் சூழல்களுக்கு எந்த அளவில் அரசால் தயாராக வைக்கப்பட்டி ருக்கிறது என்பதில்தான் இருக்கிறது. வணிகத்தில் போட்டி தவிர்க்க முடியாதது. போட்டிக்கேற்பத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அரசு செய்ய வேண்டும்!


நன்றி : தி இந்து 12.09.2016